அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 14) அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் இருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஐந்து கொள்கைத் தலைவர்களில் ஒருவர் அம்பேத்கர். அதிலும் பெரியாரையும் அம்பேத்கரையும் விஜய் தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார்.
கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அதேபோல் அப்போது விசிகவில் இருந்த ஆதவ் அர்ஜுனாவும் திமுகவை தாக்கி பேசினார். அதைத் தொடர்ந்து விசிகவில் எழுந்த சர்சையால் ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டார், பின்னர் அவரே கட்சியிலிருந்து விலகி விஜய்யின் தவெகவில் இணைந்தார்.
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலுக்கு சென்ற விஜய் அங்கு பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். எனவே அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இ.சி.ஆர் சாலை ஓரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு தனது சிஃப்ட் காரில் வந்த விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் உடன் இருந்தார்.