
கன்னியாகுமரி: பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமாரியில் சுவாமி விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்காக தமிழக அரசு கண்ணாடி பாலம் அமைத்துள்ளது. இந்த பாலத்தில் செல்வதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தினமும் கூட்டம் அலைமோதுகிறது.
கண்ணாடி பாலம் கட்டப்பட்டு நான்கு மாதத்துக்குள் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், சுற்றுலா பயணிகள் மத்தியில் பாலத்தின் உறுதி தன்மை குறித்து சந்தேகம் எழுகிறது. தற்போதும் பராமரிப்பு பணியை காரணம் காட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்துள்ளது. குறுகிய காலத்துக்குள் கண்ணாடி இழை பாலத்தில் 3-வது முறையாக பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
இதுபோன்ற கண்ணாடி பாலங்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று சான்றிதழ் வழங்கிய பிறகு தான் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். ஆனால், திறப்பு விழாவுக்காக அவசர அவசரமாக பாலப்பணியை முடித்தார்களா ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே கண்ணாடி இழை பாலத்தில் உயிர் பயமில்லாமல் சுற்றுலா பயணிகள் சென்று வரும் வகையில் உறுதியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர் நாஞ்சில் ராஜா மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈஸ்டர் விடுமுறை மற்றும் அதை தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களால் வருகிற வெள்ளிக் கிழமை முதல் கன்னியா குமரியில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடுவர். இந்நிலையில் கண்ணாடி இழை பாலத்துக்கு அவர்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காலங்களில் கண்ணாடி இழை பாலத்தில் சீரமைப்பு பணி மேற்கொள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.