Blog வேளாண்மை செய்திகள்

நில உடைமை பதிவு செய்யாத 15,000 விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்: தஞ்சை அதிர்ச்சி

தஞ்சாவூர்: விவசாயிகளின் நில உடமை பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (ஏப்.15) முடிவடைகிறது. இதை பதிவு செய்யாத விவசாயிகள், பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவி பெற முடியாத நிலை ஏற்படும்.

மத்திய அரசின் திட்டங்களை, விவசாயிகள் அல்லாத நபர்களை பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு விவசாயிக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை வேளாண்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

வேளாண்மை, தோட்டக்கலை, வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, விதை சான்றளிப்பு துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள் ஆகிய துறையினர் வாயிலாக அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொது சேவை மையங்களிலும் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஏப்.15-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான பட்டா எண், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுடன் பதிவை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது.

இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.45 லட்சம் விவசாயிகள் உள்ள நிலையில், இதுவரை சுமார் 1 லட்சம் விவசாயிகள் மட்டுமே இந்த பதிவை செய்துள்ளனர். அதேபோல, பிரதமரின் கவுரவ உதவித் தொகை பெறும் சுமார் 66 ஆயிரம் விவசாயிகளில், 51 ஆயிரம் விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இன்னும் 15 ஆயிரம் பேர் பதிவு செய்யாமல் உள்ளனர்.

இதனிடையே, பிரதமரின் உதவித் தொகை பெறும் விவசாயிகளுக்கு இந்த மாதம் 20-வது தவணைத் தொகை வழங்கப்பட உள்ளது. ஆனால், நில உடமைகளை பதிவு செய்து, தனித்துவ அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகளுக்கு இந்த உதவித் தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த நில உடமைகளை பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், அதை சரி செய்ய வேண்டும் எனவும், எனவே இதற்கான காலக்கெடுவை மேலும் நீடிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.முகமது இப்ராஹிம் கூறியது: ஒரு விவசாயிக்கு அவர் வசிக்கும் அதே கிராமத்தில் நிலம் இருந்தால் மட்டுமே இதில் பதிவு செய்யப்படும். வேறு கிராமத்தில் நிலம் இருந்தால் பதிவு செய்ய முடியவில்லை. எனவே, இதுபோன்ற சிக்கல்களை தீர்த்து, பதிவு செய்யும் வகையில், காலக்கெடுவை ஏப்.30 வரை நீட்டிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கோ.வித்யாவிடம் கேட்டபோது, ‘‘நில ஆவணங்களை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே 20-வது தவணை வழங்கப்படும் என்பதால், விவசாயிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *