
சேலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர் சோதனை சாவடியில், ஈரோட்டை சேர்ந்த வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் லியோ ஆண்டனி(45) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை, சோதனை சாவடியில் பணியை முடித்து விட்டு காரில் ஈரோட்டிற்கு புறப்பட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கருப்பூர் சுங்கச்சாவடி அருகே மோட்டார் வாகன ஆய்வாளரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் இருந்த 1 லட்சத்து 40 ஆயிரத்து 450 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், அவரை சேலம் ஒழிப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று, 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். காரில் கொண்டு வந்த பணம், லஞ்சமாக வாங்கிய பணம் தான் என முகாந்திரம் இருப்பின், மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.