Blog

ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி: வட்டி விகிதங்களைக் குறைத்த எஸ்.பி.ஐ., பி.ஓ.ஐ., இந்தியன் வங்கிகள்!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரெப்போ வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் தங்கள் ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்ட கடன் விகிதங்களைக் குறைத்துள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) கடந்த வாரம் ரெப்போ வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), பாங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் தங்கள் ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்ட கடன் விகிதங்களைக் குறைத்து உள்ளன.

கடன் விகிதங்களின் குறைப்பு வீடு,தனிநபர் உள்ளிட்ட கடன் வாங்குபவர்களுக்கு பயனளிக்கும். ஏனெனில் அவர்களின் மாதாந்திர தவணைகள் (இஎம்ஐ) குறைய வாய்ப்புள்ளது. கடந்த வாரம் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (எம்.பி.சி) ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளை குறைத்து 6% ஆக அறிவித்தது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த பிப்ரவரி மாதம் 0.25% குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 0.25% குறைக்கப்பட்டு 6% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை (ஆர்.எல்.எல்.ஆர்) 8.5%ல் இருந்து 8.25% ஆக குறைத்துள்ளது. கடன் விகிதத்தை (EBLR) 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 8.9%லிருந்து 8.65% ஆக குறைத்துள்ளது. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தையும் 8.25% ஆக உயர்த்தியுள்ளது.புதிய விகிதங்கள் இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

பாங்க் ஆப் இந்தியா (BOI) அதன் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களில் 25 பி.பி.எஸ். குறைப்பை அறிவித்துள்ளது. இது புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும். இந்த திருத்தத்தின் மூலம், சிபில் ஸ்கோரின் அடிப்படையில் வீட்டுக் கடன் விகிதம் 7.9% ஆக குறைக்கப்பட்டு உள்ளது. திருத்தப்பட்ட விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

வீட்டுக் கடன்கள் தவிர, வாகனக் கடன், தனிநபர் கடன், சொத்து மீதான கடன் மற்றும் கல்விக் கடன் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடன் தயாரிப்புகளுக்கான வட்டி விகிதங்களை பாங்க் ஆப் இந்தியா 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கி, ஏப்.11 முதல் ரெப்போ-இணைக்கப்பட்ட பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை (ஆர்பிஎல்ஆர்) 9.05 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாகக் குறைத்துள்ளது. இந்த குறைப்பு வீட்டுக் கடன் மற்றும் வணிகக் கடன்கள் போன்ற ஆர்.பி.எல்.ஆர் இணைக்கப்பட்ட கடன்களைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கான கடன் செலவுகளை குறைக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது. அவர்களின் கடன் விதிமுறைகளைப் பொறுத்து, வாடிக்கையாளர்கள் குறைக்கப்பட்ட (அ) குறுகிய கடன் தவணைக்காலத்திலிருந்து பயனடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *